நசரத்பேட்டையில் 568 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் தொகை

பதிவு:2022-04-18 12:57:32



நசரத்பேட்டையில் 568 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் தொகை : பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

நசரத்பேட்டையில் 568 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் தொகை

திருவள்ளூர் ஏப் 18 : தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழக அரசின் சிறப்புத் திட்டமான விதவையரின் மகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோருக்கு உதவிடும் வகையில் திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவித் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார். விழாவில் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 568 ஏழை பெண்களின் திருமணத்திற்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.2.16 கோடி மதிப்பீட்டிலான தாலிக்கு தங்கமும், ரூ.2.43 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவித் தொகையும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், பூவிருந்தவல்லி நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், திருமழிசை பேருராட்சி தலைவர் யு.வடிவேல், மாவட்ட சமூக நல அலுவலர் ஷே.ஹிதாயத்துன் நூரியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.