பதிவு:2022-12-13 09:37:22
மாண்டஸ் புயல் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறாக புயலால் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டார்
திருவள்ளூர் டிச 12 : மாண்டஸ் புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சி, வி.ஜி.என். மகாலட்சுமி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக புயலால் சாய்ந்த மரங்களை உடனடியாக திருவேற்காடு நகராட்சி பணியாளர்கள் மூலம் வெட்டி அகற்றும் பணிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையருமான வி.இராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் அப்பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பேசினார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி பகுதியிலும், திருத்தணி பகுதியிலும் பெய்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
திருவள்ளுர் மாவட்டத்தில் ஏற்பட்ட மழையின் அளவு சராசரியாக 12 செ.மீ. குறிப்பாக ஆவடியில் அதிகப்பட்சமாக 17 செ.மீ. மழையும், திருத்தணியில் 16 செ.மீ. மழையும் பெய்துள்ளது. இவற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளாக மாவட்டத்தில் 67 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, 2441 நபர்கள் முன்னெச்சரிக்கையாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். மான்டோஸ் புயல் கரையை கடந்த பிறகு தற்சயமம் 6 முகாம்களில் ஏறக்குறைய 164 நபர்கள் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த மாண்டோஸ் புயலினால் 24 வீடுகள் பகுதிகளாக பாதிக்கப்பட்டுள்ளது. 6 மாடுகள், 1 ஆடு உயிரிழந்துள்ளன. இவைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். மாவட்டம் முழுவதும் 107 மரங்கள் சாய்ந்தது. 80–க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது. 98 மின்கம்பங்களும், 9 மின்மாற்றிகளும் பாதிப்படைந்துள்ளது.
இவைகளும் உடனடியாக சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மனித உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. இவையெல்லாம் எடுத்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளாலும் பெரிய அளவில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் காக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் எவ்வித இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அவற்றிலிருந்து பொதுமக்களை காப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, திருவேற்காடு நகராட்சி, மூவேந்தர் நகர் மற்றும் பாலாஜி நகரில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை பால்வளத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு, தேங்கியுள்ள மழை நீரை மோட்டார் பம்புகள் மூலம் உடனடியாக வெளியேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இதில் திருவேற்காடு நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, திருவேற்காடு நகராட்சி ஆணையர் எச்.ரமேஷ், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.