திருவள்ளூர் வீரராகவர் கோவில் வளாகத்தில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து தேங்கி இருப்பதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதில் சிரமம்

பதிவு:2022-12-13 09:43:59



திருவள்ளூர் வீரராகவர் கோவில் வளாகத்தில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து தேங்கி இருப்பதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதில் சிரமம்

திருவள்ளூர் வீரராகவர் கோவில் வளாகத்தில் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து  தேங்கி இருப்பதால்  பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதில் சிரமம்

திருவள்ளூர் டிச 12 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக வீரராகவ பெருமாள் கோவில் திகழ்கிறது. இந்த வீரராகவ பெருமாள் கோவிலுக்கு திருவள்ளூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமில்லாமல் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.

மாதந்தோறும் அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பெருமாள் பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுகின்றனர். பிரசித்தி பெற்ற இந்த வீரராகவ பெருமாள் கோவில் சன்னதி தெருவில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் திருவள்ளூர் பகுதியில் சிறிய அளவில் பெய்யும் மழைக்கு கூட வீரராகவர் கோவில் வளாகத்தில் சன்னதி தெருவில் குடியிருக்கும் குடும்பங்கள் வெளியேற்றும் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து முழங்கால் அளவிற்கு மேலே தேங்கி நிற்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.

மேலும் தேங்கி நிற்கும் கழிவு நீருடன் கலந்த மழை நீரை அகற்ற நகராட்சி நிர்வாகத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் கோவில் நிர்வாகமும் இப்படி தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழை நீரை அகற்றுவதில் அலட்சியம் காட்டுவதாகவும் கோவில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் கழிவு நீரை மிதித்த படி உள்ளே செல்வதும், வீட்டிற்கு செல்லும்போது சுகாதார சீர்கேட்டுடன் செல்லும் அவல நிலை ஏற்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால் உடனடியாக கோவில் நிர்வாகம் தேங்கியிருக்கும் மழை நீர் மற்றும் கழிவுநீரை அகற்றி இனி வருங்காலத்தில் கோவில் வளாகத்தில் தேங்கி நிற்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆயிரக்கணக்கான பெருமாள் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.