பதிவு:2022-12-13 09:46:13
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியிலிருந்து 6 ஆயிரம் கன அடியாக குறைத்து உபரி நீர் திறக்கப்பட்டது
திருவள்ளூர் டிச 12 : மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 3 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது.இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து இருப்பதாக நீர்வளத் துறையினர் தெரிவிக்கின்றனர். அதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2839 மில்லியன் கன அடி நீர் இருப்பும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் , ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் மற்றும் மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் என 5900 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதனையடுத்து இன்று காலை நீர் வரத்து குறைவு காரணமாக நேற்று மாலை 7 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்ட நீரானது இன்று காலை 6 ஆயிரம் கன அடியாக குறைத்து திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கொசஸ்தலை ஆறு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பபடுவதால் கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கத்தண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம் ,எண்ணூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.
புழல் ஏரியில் இன்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2615 மில்லியன் கன அடி நீர் உள்ளது நீர்வரத்து 704 கன அடியாகவும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 187 கன அடி நீரும். அணையின் பாதுகாப்பு கருதி புழல் நீர் தேக்கத்தில் இருந்து 100 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியில் இன்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 687 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது நீர்வரத்தாக 657 கனஅடி வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 3184 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இதில் மழை நீர், வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர் என 2046 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 126 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கத்தில் இருந்து 114 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.