பதிவு:2022-12-13 09:52:38
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மருத்துவ மாணவர்களை வரவேற்று மருத்துவ அங்கி மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கினார்
திருவள்ளூர் டிச 12 : திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களை வரவேற்று மாணவர்களுக்கு மருத்துவ அங்கி மற்றும் பாடப்புத்தகங்களை வழங்கி பேசினார்.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கல்லூரி வளாகம் 21.48 ஏக்கர் பரப்பளவில் ரூ.143.02 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி பாரத பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த அக்டோபர் மாதம் 21.10.2022 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சரால் மருத்துவ சேவைகள் துவக்கி வைக்கப்பட்டது. இம்மருத்துவமனை சுமார் ரூ.165.6 கோடி செலவில் உருவக்கப்பட்டது. இதில் 10 அறுவை அரங்குகள் உள்ளன. தற்போது பல்வேறு மருத்துவ பிரிவுகளும் பொதுமக்களுக்கு செயல்பட்டு வருகின்றன.
மேலும், இக்கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் இளநிலை மருத்துவ படிப்பிற்கு ஆண்டிற்கு 100 இடங்கள் அனுமதி வழங்கியுள்ளது. அதனையொட்டி கடந்த கல்வியாண்டில் 100 மருத்துவ மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர், தற்பொழுது இந்த கல்வியாண்டில் 100 மருத்துவ மாணவ, மாணவியர்களும் சேர்ந்துள்ளனர், இதில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டீல் வருடத்திற்கு 6 மாணவ, மாணவியர்கள் சேர்ந்துள்ளனர்.
இக்கல்லுரியில் மிக பிரம்மாண்டமான ஐந்து விரிவுரை அரங்குகளும், ஒவ்வொரு மருத்துவ துறைக்கும் தனிதனியாக ஆய்வு கூடங்களும், ஆராய்சி கூடங்களும் உள்ளது. இங்கு மிகப் பிரம்மாண்டமான மத்திய நூலகம் அமையப்பெற்று 4,500 புத்தகங்களும், 40 மருத்துவ இதழ்களும் மற்றும் இனையவழி நூலகமும் உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் படிக்க ஏதுவான வசதிகளும், அவர்களின் மருத்துவ செயல்திறமையை வளர்க்க திறன் ஆய்வு கூடங்களும் உள்ளன. மேலும், இங்கு மிக பிரம்மாண்டமான 750 நபர்கள் அமர கூடிய முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் உள் அரங்கு உள்ளன.
அதுமட்டுமின்றி, இக்கல்லூரியில் மாணவர்கள் தங்குவதற்கு ஏதுவாக நவின வசதிகளுடன் இருபாலினத்திற்கு தனிதனியாக விடுதிகளும், உணவகங்களும், உடற்பயிற்சி கூடங்களும் உள்ளன. உள்ளிருப்பு மருத்துவ மாணவர்களும் தங்குவதற்கு விடுதிகளும் உணவகங்களும் உள்ளன. இவ் மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்களும், உதவி பேராசிரியர்களும், இதர மருத்துவ பணியாளர்களும் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் தங்கும் விடுதிகளும் உள்ளன. இந்த மருத்துவக்கல்லூரியில் பயில வருகை புரிந்துள்ள மாணவ, மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்தி, கற்றறிந்து சிறந்த மருத்துவர்களாக நீங்கள் விளங்க வேண்டும் என மாவட்ட ஆடசியர் தெரிவித்தார்.
முன்னதாக, முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு மற்றும் வெள்ளை அங்கி அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்றது.இதில் திருவள்ளுர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், துணை முதல்வர் திலகாவதி, மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் அருண்பாபு, மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி மண்டல நிலை அலுவலர் ராஜ்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவகல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.