செம்பரம்பாக்கம் சான்ட்ரோ சிட்டியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு : ஆறரை கோடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இனி பாதிப்பு ஏற்படாது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2022-12-15 08:17:10



செம்பரம்பாக்கம் சான்ட்ரோ சிட்டியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு : ஆறரை கோடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இனி பாதிப்பு ஏற்படாது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

செம்பரம்பாக்கம் சான்ட்ரோ சிட்டியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு : ஆறரை கோடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இனி பாதிப்பு ஏற்படாது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்  தகவல்

திருவள்ளூர் டிச 14 : திருவள்ளூர் மாவட்டத்தில் மாண்டஸ் புயல் கனமழை காரணமாக பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள நேமம் ஏரி வேகமாக நிரம்பின. இதனால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதனால நேமம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரானது பங்காரு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் கலப்பது வழக்கம். ஆனால், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால் பங்காரு கால்வாயில் உள்ள ஏழு கண் மதகு மூடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறையின் இந்த கவனக்குறைவான செயல்பாட்டால் நேமம் ஏரியிலிருந்து வெளியான உபரி நீர் செம்பரம்பாக்கம், சான்ட்ரோ சிட்டி மற்றும் திருமழிசை சிட்கோ ஆகிய பகுதிகளில் புகுந்தது

இதனால் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து அதிகாரிகளை வரவழைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் அங்குள்ள கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை சுத்தம் செய்தனர். இதனால் 24 மணி நேரத்தில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதியிலிருந்து வடிந்து இயல்பு நிலை திரும்பியது. இதனிடையே வெள்ளநீர் பாதித்த குடியிருப்பு மற்றும் சிட்கோ பகுதிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ.,ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது, ஒன்றிய செயலாளர்கள் டி.தேசிங்கு, ப.ச.கமலேஷ், ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்க்கத்துல்லாகான், திருமழிசை பேரூராட்சி தலைவர் உ.வடிவேல், துணைத் தலைவர் ஜெ.மகாதேவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.ஜே.குமார், எம்.ராம்குமார், பேருரூராட்சி செயல் அலுவலர் த.மாலா, துணை வட்டாட்சியர் டயானா, ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி வின்சென்ட், ஒன்றிய கவுன்சிலர் பிரியா செல்வம் உள்ளிட்டோர் இருந்தனர்.

அப்போது வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிரந்தர தீர்வாக ஆறரை கோடியில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த பணிகள் முடிவடைந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.