பதிவு:2022-12-15 08:24:23
திருவள்ளூர் அருகே பாகசாலை கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு : ஆபத்தை உணராமல் ஆற்றைக் கடப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்
திருவள்ளூர் டிச 14 : ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரானது கொசஸ்தலை ஆற்றில் கலந்து செல்கிறது. இது திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியத்தைச் சார்ந்த பாகசாலை கிராமத்தில் கொசஸ்தலை ஆறு வழியாக செல்வதால் அந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் பொன்னாங்குளம் , கேளம்பாக்கம், பேரம்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு இந்த பகுதி மக்கள் வேலைகளுக்கும் மற்றும் விவசாயப் பணிகளுக்கும் செல்ல முடியாமல் ஆற்று நீர் பாலத்தை ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர்.
மேலும் வேலைக்கு செல்பவர்கள் மணவூர் ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய தொழிலாளர்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இந்த ஆற்று தரை பாலத்தை மேம்பாலமாக கட்டித் தர வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் 50 ஆண்டு காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் தற்போது தரைப்பாளத்தை கடந்து செல்லும் மழை தண்ணீரில் இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மீன்பிடித்து விளையாடி வருகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க மூழ்கிய பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.