பதிவு:2022-12-21 09:41:43
கும்மிடிப்பூண்டி அருகே சட்ட விரோதமாக எரிவாயு உருளை குடோன் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி துணைத் தலைவர் மீது ஆட்சியரிடம் புகார் மனு :
திருவள்ளூர் டிச 20 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மங்காவரம் ஊராட்சியைச் சேர்ந்த ராஜாபாளையம் கிராம பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் பழனிவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் மெய்யழகன் ஆகியோர் சார்பில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது. மங்காவரம் ஊராட்சியின் துணைத் தலவைராக தேவேந்திரன் பதவி வகித்து வருகிறார். இதே ஊராட்சியில் உள்ள ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர் சட்டவிரோதமாக எரிவாயு உருளை குடோன் அமைக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
இந்தக் கிராமம் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டதோடு, வேளாண் மண்டல பகுதியாகும். அதனால் இங்கு சிறிய, பெரியளவில் தொழிற்சாலைகள் அமைக்கவும், வர்த்தக ரீதியாக தொழில் செய்யவும் அரசால் அனுமதிக்கப்படாத பகுதியாகும். இதனால் விவசாயம் பாதிப்பதோடு, அக்கம் பக்கத்தில் வசித்து வரும் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு ஏற்படும் என அச்சத்தில் உள்ளோம். அதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் எரிவாயு குடோன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
மேலும், ஒரு சில தனி நபர்கள் மீது எந்தவொரு முகாந்திரம் இன்றி புகார் கொடுத்து மிரட்டினால் அச்சமுற்று ஓடிவிடுவார்கள் என்று திட்டமிட்டு சட்ட விரோத காரியத்திற்கு கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தையும் முறைகேடாக பயன்படுத்தவும் துணிகிறார். அதோடு பணம் செலவு செய்தாவது உங்களை சிறைக்குள் தள்ளாமல் விடமாட்டேன் எனக்கூறி ஊராட்சி துணைத் தலைவர் செயல்பட்டு வருகிறார். அதனால், மேற்குறிப்பிட்ட நபருக்கு எரிவாயு குடோன் அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் என அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.