பதிவு:2022-12-21 11:02:14
மதுரவாயலில் தேர்வு எழுதி விட்டு எட்டாம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை : தம்பியை அடித்ததால் தாய் அடிப்பார்கள் என்ற பயத்தில் நேர்ந்த விபரீதம் :
திருவள்ளூர் டிச 21 : மதுரவாயல், சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் முருகன் (37)கூலித் தொழிலாளி. இவரது மனைவி புனிதா(32) அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஷர்மி(12) என்ற மகளும் ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளனர்.
ஷர்மி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் அவரது தம்பி இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த ஷர்மி அவரது தந்தைக்கு போன் செய்து தம்பி சரியாக படிக்கவில்லை. அவனை அடித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
வேலை முடிந்து முருகன் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் தனி அறையில் ஷர்மி புடவையில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அருகில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீசார் மற்றும் விருகம்பாக்கம் மகளிர் போலீசார் ஷர்மியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் ஷர்மி தனது தம்பி சரியாக படிக்கவில்லை என்று அவனை அடித்ததாகவும், அதனால் தனது தாயார் வந்து தம்பியை அடித்ததற்காக தன்னை அடிப்பாரோ என்ற பயத்தில் இருந்து வந்ததாகவும், அந்த பயத்தின் காரணமாக ஷர்மி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொள்வதற்கும் முன்பாக சர்மி தனது தாயிடம் செல்போனில் பேசியுள்ளார். அதில் தனக்கு இருக்கும் அறிவிற்கு விருது மற்றும் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் அதற்கு அவரது தாயும் பாராட்டு வைத்து விடலாம் என பேசிய ஆடியோவும் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.