பதிவு:2022-12-21 11:04:26
திருத்தணி அருகே நடைபெற்ற டாஸ்மாக் கடை கொள்ளை வழக்கில் 4-வது நபரும் கைது செய்யப்பட்டார் :
திருவள்ளூர் டிச 21 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மாமண்டூர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடையில் கடந்த 16-ம் தேதி மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு அதன் வழியாக கடைக்குள் புகுந்து 250 மதுபாட்டில்கள் கொள்ளையடித்து கொண்டு, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீசார் டாஸ்மாக் கடை அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் வெள்ளவேடு போலீசார் சமீபத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மேல் திருத்தணி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (29), சென்னை திருமழிசை பகுதியைச் சேர்ந்த திருப்பதி(24), கிறிஸ்டோபர் என்கின்ற சதீஷ்(21) ஆகிய மூன்று குற்றவாளிகளை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருந்த நிலையில் திருத்தணி அடுத்த மாமண்டூர் டாஸ்மாக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், தங்களுக்கு கிருபாகரன்(22) என்பவர் அடைக்கலம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் கிருபாகரனுக்கு மாமியார் வீடு திருத்தணி அடுத்த பூனி மாங்காடு என்ற பகுதியில் உள்ள நிலையில் திருத்தணியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து இந்த நான்கு பேரும் தங்கி இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து கனகமச்சத்திரம் போலீசார் திருத்தணியில் தலைமறைவாக இருந்த கிருபாகரனை கைது செய்தனர். ஏற்கனவே ஜெகதீஸ்வரன், திருப்பதி, சதீஷ் ஆகிய மூன்று பேரை கொலை வழக்கில் கைது செய்த நிலையில் இன்று கிருபாகரனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.