பதிவு:2022-12-24 21:48:04
திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வடை மாலை சாற்றுதல் நிகழ்ச்சி : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் :
திருவள்ளூர் டிச 24 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. அதன்படி திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஸ்ரீசஞ்சீவிராயர்(எ )ஸ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 3.30 மணி முதல் சிறப்பு அபிஷேகமானது பால், தயிர், பஞ்சாமிர்தம், மற்று் சந்தனம் ஆகியவற்றால் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் ஸ்ரீசஞ்சீவி ராயர் (எ) ஸ்ரீவீரஆஞ்சநேய ஸ்வாமிக்கு வடமாலை சாத்தி நெய் வேத்தியம் காட்டப்பட்டது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு காக்களூர், திருவள்ளூர், பூங்காநகர், பெரியகுப்பம், ராஜாஜிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
அதே போல் திருவள்ளூர் அடுத்த ராஜாஜிபுரம் தேவி மீனாட்சி நகர் பகுதியில் 32 அடி உயரம் உள்ள விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இந்த விழா காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. அதை தொடர்ந்து விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி மூல மந்திர யாகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 32 அடி உயரமுள்ள விஸ்வரூப பஞ்சமாக ஆஞ்சநேயருக்கு 100 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வடமாலை சாற்றப்பட்டது.
இதனை திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.அதே போல் திருவள்ளூர் மாவட்டம் திருப்பந்தியூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவில் 67 ஆயிரம் வடை மாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதில் பேரம்பாக்கம், மப்பேடு, கொண்டஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அஞ்சநேயரை வழிபட்டு சென்றனர்.