பதிவு:2022-12-27 17:49:13
ஆந்திராவில் தொடர் மழை காரணமாக கண்டலேறு அணணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரால் ஜூரோ பாயிண்ட்டில் 533 கன அடியாக நீர் வரத்து அதிகரிப்பு :
திருவள்ளூர் டிச 27 : சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். இந்த பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கொள்ளளவு நீரை சேமித்து வைக்க முடியும். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.49 அடியாகவும் நீர் இருப்பு 3035 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 1983-ம் ஆண்டு இரு மாநில முதல்வர்கள் கிருஷ்ணா நிதி நீர் பெற ஒப்பந்தம் செய்தனர். ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தமாகும். ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜூரோ பாயிண்ட் வரை 152 கி.மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு. அங்கிருந்து பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அமைந்துள்ள 25 கி.மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி நீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 28-ந் தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து முதலில் 2 ஆயிரத்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு 1,400 கன அடியாக குறைக்கப்பட்டது. வழக்கமாக ஆந்திரா விவசாயிகள் கிருஷ்ணா கால்வாய் நீரை பயன்படுத்துவார்கள். இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
ஆனால் கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்தவில்லை. இதனால் பூண்டிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 533 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும் பூண்டி ஏரிக்கு மழை நீர், வரத்துக் கால்வாய்கள் மூலம் பெறப்படும் நீர், கேசாவரம் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு அதன் மூலம் பெறப்படும் நீர் மற்றும் கிருஷ்ணா நீர் என நீர்வரத்து 1100 கன அடியாக உள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் 3035 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதனால் 200 கன அடி வீதம் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக 250 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 38 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.