திருமுல்லைவாயல் சி.டி.எச். சாலை பாதாள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு :

பதிவு:2022-12-27 17:57:28



திருமுல்லைவாயல் சி.டி.எச். சாலை பாதாள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு :

திருமுல்லைவாயல் சி.டி.எச். சாலை பாதாள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை  பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் ஆய்வு  :

திருவள்ளூர் டிச 27 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில், சி.டி.எச். சாலை, முருகப்பா பாலிடெக்னிக் அருகில் உள்ள பாதாள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சென்று பார்வையிட்டு உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, அவ்வுடைப்பை உடனடியாக சரி செய்யவும் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆவடி மாநகராட்சி குடிநீர் தேவை பூர்த்தி செய்ய பல்வேறு இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் நீரானது திருமுல்லைவாயில் நாகம்மை நகரிலுள்ள 15 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைத் நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்டு ராட்சத குழாய் மூலம் குடியிருப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட உயர் அழுத்தம் காரணமாக ராட்சத குழாயில் அமைக்கப்பட்டுருந்த வால்வு-இன் உட்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரானது சாலையில் வழிந்தோடியது.

இச்சம்பவம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு தகவல் கிடைத்தவுடன் உடனடியாக நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது ராட்சத வால்வை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அப்பொழுது அவர், சற்றும் யோசிக்காமல் திடீரென ராட்சத வால்வு உடைந்த பகுதியை துல்லியமாக கண்டறியும் வகையில் சாலையிலேயே படுத்து அவ்வால்வு உடைந்த பகுதியை ஆய்வு செய்தார். இவ்வாறு நேரடியாக களத்தில் இறங்கி குடிநீர் வால்வு உடைந்த பகுதியை நேரில் ஆய்வு செய்த நிகழ்வு அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெறும் ஆச்சரியத்தையும், வரவேற்பையும் பெற்றது.

இவ்வாய்வின் போது அமைச்சர் உடைந்த இந்த குடிநீர் குழாய் பகுதி விரைவில் சரி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் இதர துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, தற்போது உடைந்த பகுதி சரிசெய்யும் பணிகள் துவங்கப்பட்டு விரைவாக நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பால்வளத்துறை அமைச்சர் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது, அவ்வட்டாட்சியர் அலுவலகத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டு, அதில் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த பொதுவான பல்வேறு கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வுகளில், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆவடி மாநகராட்சி பணிக் குழு தலைவர் சா.மு.நா.ஆசிம் ராஜா, மண்டல குழு தலைவர்கள், ஆவடி மாநகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன், ஆவடி வட்டாட்சியர் எம்.வெங்கடேஷ், நகர நிலவரி தனி வட்டாட்சியர் ஆர்.மணிகண்டன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.