"அலார்ட் கோல்டன் ஆர்மி" எனும் விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில் முதலுதவி செய்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள்

பதிவு:2022-12-29 19:57:11



திருவள்ளூர் மாவட்டத்தில் "அலார்ட் கோல்டன் ஆர்மி" எனும் விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில் முதலுதவி செய்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்த்தார்

திருவள்ளூர் டிச 29 : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கத்தில் இன்னுயிர் காப்போம்-உதவி செய் என்ற திட்டத்தின் கீழ் "அலார்ட் கோல்டன் ஆர்மி" எனும் விபத்தில்லா சமுதாயத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உருவாக்கும் நோக்கத்தில் அலார்ட் அறக்கட்டளை சார்பாக நடைபெறும் முதலுதவி செய்வதற்கான இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பேசினார்.

தமிழக அரசு சார்பாக மருத்துவ அவசர ஊர்திகள் மக்களுக்காக செயல்பாட்டில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும், சுமார் 12 நிமிடங்களில் மருத்துவ அவசர ஊர்திகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று தேவையான மருத்துவ அவசர முதலுதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகளை மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முதலுதவி பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் பல்வேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை உயிரிழப்பின்றி காப்பாற்ற முடியும். அதன் முதற்கட்டமாக, திருவள்ளுர் மாவட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இன்று “அலார்ட் அறக்கட்டளை” சார்பாக முதலுதவி குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

பேருந்து பயணம், வானுர்தி பயணம், இரயில் பயணம், பள்ளி, கல்லுரி, கோயில்கள் போன்ற பொது இடங்களில் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு ஏதேனும் வலி அல்லது அசம்பாவிதம் ஏற்பட்டால் மருத்துவ அவசர ஊர்தி வருவதற்கு முன்னர் செய்யப்பட வேண்டிய முதலுதவி குறித்து இப்பயிற்சியில் பயிற்றுவிக்கப்படும். இப்பயிற்சி தகுந்த அவசர காலங்களில் இறப்பை தவிர்த்து முதலுதவி செய்திட பெரும் உதவியாக அமையும். அவசர காலங்களில் அனைவராலும் செயல்படுத்தகூடிய மருத்துவ பயிற்சிகளை அனைவரும் தெரிந்து வைத்து கொண்டால் இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

இப்பயிற்சியை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆட்டோ ஓட்டுநர்கள், ஈப்பு ஓட்டுநர்கள், அன்றாடம் பயணம் மேற்கொள்பவர்கள் தெரிந்து வைத்திருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று கருதுகிறேன், அது மட்டுமன்றி தொழிலாளர்கள், பல்வேறு அரசு துறைகளை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், பல்வேறு கிராம ஊராட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள், ஆகியோர்களுக்கு இப்பயிற்சியை கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று கருதி, அதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்படும் என்ற விவரத்தையும் தெரிவித்துக் கொண்டு, இன்றைய தினம் இந்நிகழ்வினை தொடங்கி வைக்க உரிய முயற்சி மேற்கொண்ட திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும், உரிய ஒத்துழைப்பு வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அலார்ட் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற முதலுதவி செய்வதற்கான இலவச பயிற்சி துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் முதலுதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான "அலார்ட் கோல்டன் ஆர்மி" எனும் இலச்சினை வெளியிட்டு, அலார்ட் அறக்கட்டளை சார்பாக உருவாக்கப்பட்ட முதலுதவி செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை மாணவ-மாணவியர்கள் முன்னிலையில் பார்வையிட்டார்.

இவ்விழாவில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீ வத்சன், அலார்ட் அறக்கட்டளை இணை நிறுவனர் ராஜேஷ் த்ரிவேதி, அலார்ட் அறக்கட்டளை பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.