பதிவு:2022-03-12 22:24:49
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோவில் விழாக்கள் நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கடம்பாடி மாரி சின்னம்மன் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் உள்ள மாரி சின்னம்மனை மீனவர் சமுதாய மக்கள் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
கோவிலின் தெப்ப உற்சவ விழா கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குறைவான அளவில் உள்ளூர் பக்தர்களை வைத்து நடத்தப்பட்டது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோவில் விழாக்கள் நடத்த அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று இரவு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கடம்பாடி மாரி சின்னம்மன் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. வாணவேடிக்கை, சாமி ஊர்வலம், பொருட் காட்சி ஆகியவை வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.
சென்னை, மரக்காணம், புதுச்சேரி, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மீனவர் சமுதாய மக்கள் கடம் பாடியில் குவிந்து சாமி தரிசனம் செய்து தெப்ப உற்சவத்தை கண்டுகளித்தனர்.
இன்று காலை சாமி வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெற்றது. மாமல்லபுரம் போலீசார் நேற்று இரவு விடிய விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.