பதிவு:2024-05-04 19:29:10
திருவள்ளூரில் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கைது.
திருவள்ளூர், மே 4- வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் அரசு வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதைக் கண்டித்தும், கட்டுமானப்பணிகளை நிரந்தரமாக நிறுத்தக்கோரியும் தெய்வத்தமிழ்ப் பேரவை மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று மாலை வடலூரில் கண்டன ஆர்ப்பாடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளையும், வள்ளலால் பேரவைத் தலைவர்களையும் தடுப்புக்காவலில் வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதையடுத்து தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் . அதன்படி திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பெ.பசுபதியை மணவாளநகர் போலீசார் நேற்று விடியற்காலை 5 மணி அளவில் பெரும் வாகனத்துடன் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள அவர் இல்லத்திலேயே கைது செய்து மணவாள நகர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். சில மணி நேரத்திற்கு பிறகு திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வடலூருக்கு செல்வதை தடுக்கவும் மாவட்ட காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.