பதிவு:2022-03-12 22:24:59
அசைவ உணவுகளை எண்ணையில் முழுமையாக பொரித்து உண்பதை விட குழம்பாக வைத்து வாரத்தில் ஒரு முறை உண்பது சிறந்தது.
நமக்கு ஏற்படும் பொதுவான பல நோய்களுக்கு நமது உணவு பழக்கவழக்கங் களும், வாழ்க்கை நெறிமுறைகளுமே முக்கியமான காரணமாக அமைகின்றன. எந்திரமயமான தற்போதைய நவீன வாழ்க்கை முறையினால் நாம் வேலை செய்யும் நேரமும், நம் அன்றாட உணவு முறைகளும், உறங்கும் கால அளவு உட்பட அனைத்தையும் நமது தேவைக்கேற்ப நாம் மாற்றி அமைத்துள்ளோம்.
நமது உடல் நோயின்றி செயல்பட அடிப்படை காரணமாக இருப்பது நம் உணவும், வாழ்வியல் முறையும் ஆகும். நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தின் பல நூல்களிலும் திருக்குறள், புறநானூறு போன்ற நம் பழந்தமிழ் நூல்களிலும், நமது உணவு முறைகள் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
உணவே மருந்து, மருந்தே உணவு என்பதே நமது பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படை. பண்டைய காலத்தில் நாம் பயன்படுத்திய சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, வெள்ளை சோளம் போன்றவையும், சீரக சம்பா, குன்றிமணிச் சம்பா, மணிச்சம்பா போன்ற அரிசி வகைகளும் நமது உடலுக்கு உணவாக மட்டுமின்றி உரமாகவும் அமைந்தன.
நமது அன்றாட உணவில் கீரைகளையும், காய்கனிகளையும் மறந்து, துரித உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் மலச்சிக்கல், வயிற்றுப் புண்ணில் தொடங்கி, உணவு பாதையில் புற்றுநோய் உட்பட அனைத்தும் துரிதமாகவே வந்துவிடுகின்றன.
மீண்டும் நாம் நம் பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றும் முறையை நம் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் சிறு வயதில் இருந்தே தொடங்க வேண்டும். குழந்தைகளுக்கு பிஸ்கட் மற்றும் இதர பேக்கரி பொருட்களுக்கு பதிலாக உலர்ந்த பழவகைகள், முந்திரி, பாதாம், கடலைமிட்டாய், எள்ளுருண்டை, சுண்டல் போன்றவைகளை கொடுக்கலாம்.
அசைவ உணவுகளை எண்ணையில் முழுமையாக பொரித்து உண்பதை விட குழம்பாக வைத்து வாரத்தில் ஒரு முறை உண்பது சிறந்தது.
அதிகாலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீர் அருந்தி மலம் கழித்த பிறகு குளித்து உண்ணும் உணவே சிறந்தது. நேரம் தவறி உண்பதாலும், அளவுக்கு மீறிய அதிகமான உணவினை உண்பதாலும் அஜீரணம், மந்தம் போன்றவை ஏற்பட்டு பிற நோய்களுக்கு அடிப்படையாக அமைகின்றன.
அரிசி, பிட்டு, உளுந்து களி போன்ற நமது உணவு முறைகள் பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும், பிள்ளைபேறு பருவத்திலும் இன்றியமையாதது. இந்த உணவு வகைகளை மறந்ததால் தற்போது நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள் போன்றவை பொதுவான நோய்களாக அநேக வளர் இளம் மகளிரிடம் காணப்படுகின்றன.
எனவே எந்த வகையான உணவை உண்கிறோம், எந்த அளவு உண்கிறோம் என்பதை சார்ந்தே நாம் பல நோய்களில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள இயலும். எனவே இயற்கையோடு இணைந்த நம் பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி வளமோடு வாழ்வோம்.
எந்த உணவை உண்ண வேண்டும் என்பது மட்டும் இன்றி எவ்வாறு உண்ண வேண்டும், எந்த விதமான பாண்டங்களில் சமைக்க வேண்டும் என நம் சித்த மருத்துவ நூல்கள் விளக்குகின்றன.
மண்பாத்திரங்களில் உணவை சமைப்பதால் உணவின் பண்புகள் மாறுவது இல்லை. வாழை இலையில் உண்ண சருமத்தில் பளபளப்பு உண்டாகும். உடலுக்கு ஏற்ற உணவுகளை அறுசுவைகள் நிறைந்ததாய் உண்ண வேண்டும். நாம் உண்ணும் உணவில் உள்ள ஒவ்வொரு சுவைகளும், நமது உடல் தாதுக்களை வன்மைப்படுத்துகின்றன. பொதுவாக உணவு நமது உடலில் 2-ம் சாமத்தில் செரிமானம் ஆகின்றது.
எனவே தான் ஒரு தினத்திற்கு 3 வேளை உணவை உண்கிறோம். பொதுவாக காலை உணவை 8 மணிக்குள்ளும், மதிய உணவை 1 மணிக்குள்ளும், இரவு உணவை 6.30 - 7 மணிக்குள்ளும் உண்ண வேண்டும் என நமது முன்னோர்கள் கூறுகின்றனர். ஆனால் காலப் போக்கில் நாம் உணவு உண்ணும் நேரம் மாறியதால், அவை செரிமானம் அடையும் நேரமும் மாறுபட்டு உடலில் பல நோய்கள் தோன்றுகின்றன.
இதனை தவிர்க்கும் விதமாகவே நம் முன்னோர்கள் ஏகாதசி, சஷ்டி, கிருத்திகை ஆகிய நாட்களில் விரதங்களை கடைபிடித்தனர். இவ்விரதங்களில் நாம் பட்டினி இருப்பதால் நமது செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது.
பொதுவாக பட்டினி இருக்கும் போது நமது உடலில் பித்தம் அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே மறுநாள் அதிகாலையில் அகத்தியிலை, நெல்லிக்கனி, வெண்பூசணி போன்ற பித்தத்தை சாந்தி செய்யும் பொருள்களால் செய்த உணவை உண்ண வேண்டும். எனவே 15 (அ) 30 நாள்களுக்கு ஒருமுறை பட்டினி இருப்பதன் மூலம் செரிமான உறுப்புகளில் ஏற்படும் பல நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.
மைதா போன்றவை கலந்த துரித உணவுகளை தவிர்த்து, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய கீரை வகைகளையும், அறுசுவைகள் சேர்ந்த உணவினையும் அன்றாடம் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோயின்றி வாழலாம். மேலும் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு தருவதற்கு பட்டினி எவ்வளவு முக்கியமோ, அதே போல உணவு பாதை முழுவதையும் சுத்தம் செய்ய 4 மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு மருந்து எடுப்பதும் அவசியம். பேதி மருந்தை அதிகாலையில் வெறும் வயிற்றில் எடுப்பது நலம். நோயின் தன்மை, சிகிச்சை பெறுபவரின் முக்குற்ற தேக அமைப்பு இவற்றை கொண்டு தகுந்த பேதி மருந்துகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.
இவை மட்டுமின்றி தண்ணீரை அருந்தும் முறைகள் பற்றியும் நம் சித்த மருத்துவ நூல்களில் விளக்கி உள்ளனர். தாம்பிர பாத்திரத்தில் தண்ணீரை வைத்து அருந்த இருதயம் பலப்படும்; மண் பாத்திரங்களில் காய்ச்சிய வெந்நீரை உணவுக்கு பின் அருந்தினால் எதிர்க்கின்ற உணவு, புளி ஏப்பம் ,குன்மம், காசம் ஆகியவை ஏற்படுவது தவிர்க்கப்படும்.
மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கமும் ஓய்வும் இன்றியமையாதவை ஆகும். உறக்கத்தின் மூலமே நமது உடல் நாள் முழுவதும் செய்த உழைப்பின் களைப்பில் இருந்து விடுபட்டு மீண்டும் புத்துணர்ச்சி பெறுகிறது. நாம் தூங்கும் அளவிற்கும் நமது உடலின் வளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாக தற்கால நவீனமுறை ஆராய்ச்சிகளும் விளக்குகின்றன.
ஆனால் இவற்றிற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர் உறங்கும் கால அளவு, உறங்கும் வழிமுறை ஆகியவற்றை நம் நூல்களில் விவரித்துள்ளனர். இடதுபுறமாக படுத்து உறங்குவதே உறக்கத்திற்கான சிறந்த முறையாகும். இவ்வாறு உறங்குவதனால் இதயத்திற்கு குருதி சுற்றோட்டம் செல்வது மேம்படுவதாக தற்கால ஆராய்ச்சிகளும் விளக்குகின்றன.
முன்னரே கூறியது போல தூக்கத்திற்கும் நமது உடல் வளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாலேயே குழந்தைகள் 12 மணி நேரமாவது உறங்குவது அவசியம். 5-15வயது வரை உள்ளோர் 8-10 மணி நேரமும், 16-30வயது வரை 7மணி நேரமும், 30-50 வயது வரை 6 மணிநேரமும், அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களுக்கு 8 மணி நேர உறக்கமும், பிற நேரங்களில் ஓய்வும் அவசியம்.
இரவில் உறங்கி அதிகாலையில் சூரியன் உதயமாவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு எழும்புவது சிறந்தது. இதனால் நமது மூளை மற்றும் பிற உடல் உறுப்புகள் புத்துணர்ச்சியும் வன்மையும் பெறுகின்றன. வாதம், பித்தம், கபம் எனும் 3 தோஷங்களும் தன்னிலையில் செயல்படுகின்றன.
ஆனால் தற்போது நமது வாழ்க்கை முறையின் மாற்றத்தினால் இரவில் கண்விழித்து பணிக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நமது பொருளாதார தேவைக்காக நாம் செய்யக்கூடிய இரவு பணிகள் நமது உடல்நலத்தை பாதிப்பதாக உள்ளன. மேலும் இரவில் அதிகமாக மடிக்கணிணிகள், கைபேசிகளை பார்த்துக்கொண்டே இருப்பதால் நமது கண்கள் பாதிக்கப்படுவதோடு உறங்கும் நேரமும் மாறுபட்டு உடலின் இயல்பான செயல்பாட்டு முறைகள் பாதிக்கப்பட்டு தூக்கமின்மை, ரத்த அழுத்தம் அதிகரிப்பு அதனை தொடர்ந்து இருதய நோய்கள் ஏற்படுகின்றன.
இரவில் பூமி குளிர்ச்சி அடைகிறது. அதே போல் நமது உடலும் உழைப்பின் வெப்பத்தை போக்கி முற்றும் குளிர்ச்சி பெற இரவு பொழுதே சிறந்தது. எனவே இரவில் உறங்குவதன் மூலம் உடலும் குளிர்ச்சி அடைகிறது. இதற்கு மாறாக இரவில் கண்விழித்து, பகலில் உறங்குவதால் உடல் வெப்பம் அதிகப்படுகிறது. இதனால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பாதிப்பும் ஏற்படுகிறது. இதனால் குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம் அடைகின்றனர். இளைஞர்களும், நடுத்தர வயதினரும் பகல் நேர உறக்கத்தை தவிர்ப்பது நல்லது. ஆனால் வயதில் முதியோர், குழந்தைகள், நோயுற்றோர் பகலில் ஓய்வு எடுக்கலாம்.
இரவில் சாதாரணமாக 8 மணிக்குள் உண்டு 10 மணிக்குள் உறங்க போவது சிறந்தது. அதற்கு மேல் நேரம் தவறி தூங்க செல்வதால் அதிகாலையில் எழ சிரமமாக இருக்கும்.
மேலும் இலவம் பஞ்சு மெத்தை உடல் சூட்டை நீக்கும். கோரைப்பாயில் உறங்குவதால் தேகக் குளிர்ச்சியும், சுக நித்திரையும் உண்டாகும். போம் மெத்தைகள் உடல் சூட்டினை அதிகரித்து மூலம் போன்ற நோய்கள் தோன்ற காரணமாக இருப்பதால் அவற்றை தவிர்த்து இயற்கையான பருத்தி அல்லது இலவம் பஞ்சு மெத்தையை பயன்படுத்துவது நன்மை தரும்.
மேலும் இரவு உறக்கத்தை தவிர்ப்பதால் மனச்சோர்வு, வாத நோய்கள், அஜீரணம், தலைவலி, தலைசுற்றல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. உறக்கம் இன்மையால் அவதிப்படுவோர் வாரம் இருமுறை எண்ணை குளியல் செய்யலாம்.
எண்ணை குளியல் என்பது நமது சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான வழிமுறைகளுள் ஒன்று. எண்ணை தேய்த்து குளிப்பதன் மூலம் உடல் பலம் பெறும். தலைவலி விடும். மேலும் உடலின் ரத்த ஓட்டம் அதிகமாகும். எண்ணையை தேய்த்துக் கொண்டு சிறிது நேரம் ஊற வைப்பதால் மருந்தின் சத்துக்கள் உடலினுள் செல்கின்றன. எனவே வாரத்திற்கு 2 முறை எண்ணை குளியல் செய்யலாம். ஆண்கள் மற்றும் குழந்தைகள் புதன்- சனிக்கிழமையும், பெண்கள் செவ்வாய் - வெள்ளிகிழமையும் எண்ணை குளியல் செய்வது நன்று என நம் மருத்துவ நூல்கள் விளக்குகின்றன. எண்ணை குளியல் செய்யும் போது பகல் உறக்கத்தை தவிர்த்து, பத்திய உணவுகள் மேற்கொள்வது அவசியம்.
உணவு மற்றும் உறக்கத்திற்கு பிறகு நம் உடல் நலனில் பெரிதும் பங்கு வகிப்பது உடற்பயிற்சியும், விளையாட்டுகளும் ஆகும். உடலுக்கு வன்மையும், மனதிற்கு அமைதியையும் தரும் யோகப் பயிற்சிகள் பற்றியும், நமது அறிவுத்திறனை மேம்படுத்தும் பல விளையாட்டுக்கள் பற்றியும் நம் முன்னோர் கூறியுள்ளனர். நமது பாரம்பரிய விளையாட்டுகளில் சிலம்பம், சடுகுடு, மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகளும், தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், சொல் விளையாட்டு, விடுகதை சொல்லுதல், பரமபதம், கயிறாட்டம் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளும் நமது பாரம்பரிய விளையாட்டுகளில் சில ஆகும். இவை நமது உடல் நலனை காப்பதோடு அறிவு திறனையும் மேம்படுத்துகின்றன.
பல்லாங்குழி விளையாட்டு குழந்தைகளின் கணித திறனை கூட்டுவதாகவும், தாயம், பரமபதம் போன்றவை குழந்தைகளுக்கு வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை புரிய வைப்பதற்காகவும், கயிறாட்டம் மூச்சுமண்டலத்தை தூய்மை செய்து, உடல் கழிவுகளை வெளியேற்றவும், விடுகதை, சொல் விளையாட்டு போன்றவை குழந்தைகளின் யோசிக்கும் திறனையும், பேச்சு ஆற்றலையும் அதிகரிப்பதாகவும் அமைந்தன.
ஆகவே நாம் நோயின்றி வாழ உணவும், உறக்கமும் அடிப்படையானவை. அறுசுவைகளும் நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்வதோடு, நம் முன்னோர் கூறியபடி சரியான உறங்கும் முறைகளை பின்பற்றுவதால் நோயின்றி வளமோடு வாழ இயலும்.
advertisement